கோயம்புத்தூர் நாகராஜபுரம் அருகே உள்ள K.G. கார்டன் சிட்டி பகுதியில் தெருநாய்கள் பிரச்சனை நீண்ட காலமாக நிலவி வருவதாகக் கூறி, அப்பகுதி குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும், ஆனால் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உணவு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெருநாய்கள் காரணமாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்வதிலும் சிரமம் இருப்பதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய குடியிருப்புவாசிகளை அவதூறாக பேசியதாகவும், சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி தகாத பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும், மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டமாக பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
K.G. கார்டன் சிட்டியில் தெருநாய்கள் தொல்லை – பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply