சேலை அணிந்து வெறுங்காலுடன் ஓட்டம்… குடும்பத்தை காப்பாற்ற போராடும் கவிதா மஹதோ!

குடும்பத்தை காப்பாற்றவும், தனது கனவை நிறைவேற்றவும் தினமும் கடுமையாக உழைத்து வருகிறார் கவிதா மஹதோ.
கணவர் தீபக் மஹதோ குஜராத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது சிகிச்சைக்காக அதிகளவில் செலவு செய்யப்பட்டதால், குடும்பம் கடனில் சிக்கியது. அதன்பிறகு ஆறு மாதங்களில் அவரது மாமனாரும் அதே நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு சிறு குழந்தைகள் மற்றும் மாமியார் குடும்பத்தின் பொறுப்பை சுமக்கும் கவிதா, கடனை அடைக்க செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார்.
தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளும் அவர், பின்னர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உடல் உழைப்பிலும் ஈடுபடுகிறார். வெயிலையும் பொருட்படுத்தாமல், சேலை அணிந்தபடியே வெறுங்காலுடன் ஓடும் அவரது விடாமுயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என்பதற்கு கவிதா மஹதோவின் போராட்டம் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.