தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முத்துக்கடை
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்கள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பவானி வடிவேலு வரவேற்புரையாற்றினார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது, குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், “பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை”, “வீட்டிலும் பாதுகாப்பில்லை, வீதியிலும் பாதுகாப்பில்லை”, “ஐந்து மாதங்களில் 500 பாலியல் குற்றங்களா?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பெண்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம், போதைப் பழக்கத்தால் ஏற்படும் சமூகச் சீர்கேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல், ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைகள், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைபாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், விலைவாசி உயர்வைக் குறைத்து பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது