கோவை பெரியார் அறிவுலகம் போலி நூல்கள் விவகாரம் – பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி பறிப்பு!

கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தியின் கூடுதல் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலக நூலகத்தில், போலியான பதிப்பகங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர்கள் பெயர்களில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
மேலும், நூல்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நூல் கொள்முதல் தொடர்பாக விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் வலுத்தன.
இந்தச் சூழலில், பொது நூலகத் துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தியிடம் இருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் விவகாரம் தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும்போது தொடர்ந்து பார்க்கலாம்.