தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி, சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அன்பில் மகேஸ் தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். சோதனையில் ஆவணங்கள், வங்கி விவரங்கள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அன்பில் மகேஸுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் இன்று நேரில் ஆஜரானார்.
அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் பணப் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுடனான தொடர்புகள் குறித்து போலீசார் கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது மீண்டும் ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.










Leave a Reply