கோவை செம்மொழிப் பூங்காவில் 2 மாத ஊதியம் நிலுவை: தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

கோவை செம்மொழிப் பூங்காவில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் செம்மொழிப் பூங்காவில், தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பூங்காவின் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர்கள், தங்களுக்கு உரிய ஊதியம் தொடர்ந்து வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பணியாளர்கள் பூங்கா வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பணியாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.