கோவையில் பரபரப்பு! காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு – காலில் காயம்

கோவை மாநகரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், சிறுமியை மிரட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாளை கைப்பற்றுவதற்காக, தவசியை காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, காவல் ஆய்வாளரை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.
தொடர்ந்து தப்பிச் செல்ல முயன்ற தவசியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், எச்சரிக்கையையும் மீறி மீண்டும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசாரின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டதாகக் கூறி, தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.