ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு புகார்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர்கள் மற்றும் திட்டப் பணிகளை குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கியதன் மூலம் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 1,020 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு மற்றும் லஞ்சப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ். சுதர்சனம், ஜே.ஜே. எபெனேசர் உள்ளிட்ட 13 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனியார் நிறுவனப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறது.