95 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜவுளி இயந்திரக் கண்காட்சி!

நொய்டாவில் டிச., 4 முதல் 9 வரை நடைபெறுகிறது

கோவை, ஆக.12:

ஜவுளி உற்பத்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், “இந்தியா ITME 2026” சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நொய்டாவில் வரும் டிசம்பர் 4 முதல் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு, கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் இந்தியா ITME சங்கத்தின் தலைவர் கேத்தன் சங்வி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சீமா ஸ்ரீவத்சவா மற்றும் கவுரவ பொருளாளர் எஸ். செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி குறித்த தகவல்களை தெரிவித்தனர்.

95 நாடுகள் பங்கேற்பு

6 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் கண்காட்சியில் 95 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் 1,800-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 18 அரங்குகளில் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய ஜவுளித் துறையை இணைக்கும் முக்கிய தளமாக இந்தக் கண்காட்சி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள்

நார், நூல், துணி முதல் ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகள் வரை, ஜவுளித் துறையின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

குறிப்பாக, தானியங்கி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

‘Textile Horizons 2026’ மாநாடு

“ITME NEXT” என்ற கருத்தாக்கத்துடன் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, “Textile Horizons 2026” என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடும் நடைபெற உள்ளது.

இதில் உலகளாவிய ஜவுளித் துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் பங்கேற்று, ஜவுளி உற்பத்தியின் எதிர்காலம், புதிய கண்டுபிடிப்புகள், தானியங்கி தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.

மேலும், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், சர்வதேச சந்தைகளில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் இந்தக் கண்காட்சி முக்கிய தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஜவுளிப் பொறியியல் துறையினர் இந்த சர்வதேச கண்காட்சியில் அதிக அளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.