கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி, மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோவையில் மூலப்பொருள் வங்கி மற்றும் விலை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். சிறு தொழில்களை பாதுகாக்க வட்டி மானியம், ஜிஎஸ்டி சீரமைப்பு மற்றும் மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். கோவை–திருப்பூர் தொழில் மண்டலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் தேசிய மஞ்சள் வாரிய கிளை அமைக்கவும், பெருந்துறையில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மதம் மாறிய இஸ்லாமியர்களின் சமூகநீதி உரிமையை பாதுகாக்க தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ தேசிய தலைவர் ஃபைஜி, பாஜகவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன், எஸ்டிபிஐ கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பாஜக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், பாஜகவுக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறினார். மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதன் மூலம் பாஜக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதாகவும், இதுகுறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற பிரச்சினைகளில் காங்கிரஸ் உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகள் உரிய அளவில் குரல் கொடுக்கவில்லை என்றும், மக்களின் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும் ஃபைஜி தெரிவித்தார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








Leave a Reply