ரத்தினபுரி காவல் நிலையத்தில் தொழிற்சங்க நிர்வாகி தாக்கப்பட்டதாக புகார்

கோவை ரத்தினபுரி C4 காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் பாண்டியன், BJMM அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சைலு ஆண்டனியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் காவல் உதவி ஆய்வாளர் அறையில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு BJMM அமைப்புசாரா தொழிற்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சைலு ஆண்டனி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தொழிற்சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக BJMM மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவில், சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், காவல் நிலைய CCTV காட்சிகள், மருத்துவப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பாதுகாத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்டம் மற்றும் துறை விதிமுறைகளின்படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

சைலு ஆண்டனிக்கு தேவையான மருத்துவ மற்றும் சட்டரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“காவல்துறையின் நியாயமான பணியை மதிக்கிறோம். ஆனால் எந்த அதிகாரியும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. உண்மை வெளிவந்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரை ஜனநாயக மற்றும் சட்டபூர்வமான முறையில் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என BJMM நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

“நீதி வேண்டும்; உண்மை வெளிவர வேண்டும்; சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.