பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தக் கோரி மனு – ஆகஸ்ட் 24 முதல் போராட்டம் நடத்த பால் உற்பத்தியாளர்கள் முடிவு

கிணத்துக்கடவில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து, முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், ஆவின் நிறுவனம் சுமார் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்வதாகவும், மீதமுள்ள பாலை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆவினில் குறைந்த விலை கொள்முதல் குறைந்த விலையில் விற்பனை தனியார் அதிக விலை கொள்முதல் அதிக விலை விற்பனை

அரசு அறிவித்துள்ள லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு போதுமானதாக இல்லை என்றும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பால் விலை நிர்ணயத்தில் 4.0/8.0 தரத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும், சங்கத்தின் மார்ஜின் கொள்முதல் விலையில் 10 சதவீதத்துக்கு குறையாமல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்து, ஆவின் நிர்வாகம் மற்றும் பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ள பால் நிறுத்தப் போராட்டம் தொடர்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு வழங்கும் நிகழ்வில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் கே.ஏ. சுப்பிரமணியம், நலச்சங்க செயலாளர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் கோவை மாவட்ட உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆகஸ்ட் 24 முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களும் பங்கேற்பார்கள் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.