“காவலரை அடித்தது என் தவறுதான்!” – தஞ்சாவூர் இளைஞர் ஆகாஷ் பரபரப்பு பேட்டி!

தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தின் போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை அறைந்ததாக கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞர் ஆகாஷ், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் இளைஞர் ஆகாஷை தாக்கியதாகவும், அதற்கு பதிலடியாக ஆகாஷ் காவலரை அறைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆகாஷ் உள்ளிட்ட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமின் வழங்கியது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆகாஷ், “காவலரை அடித்தது என் தவறுதான். அந்த நேரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்துவிட்டது. முன்கூட்டியே திட்டமிட்டு நான் செய்யவில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
காவலர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் மற்றும் அதற்கு இளைஞர் பதிலடி கொடுத்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.