கோவை, அக்டோபர் 26:
கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையம் மற்றும் ஜி.பி. சத்தி ரோடு ஆகிய இரண்டு இடங்களில் செயல்பட்டு வரும் மாடு அறுவை மனைகளில், வியாபாரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இந்த மாடு அறுவை மனைகளின் குத்தகை ஒப்பந்ததாரரான நிம்மதி இஸ்மாயில், தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி, முதலுதவி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தராமல், கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், மாடுகளை அடைத்து வைக்கும் பட்டியை உள்வாடகைக்கு விடுவதாகவும், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்காவிட்டால் மாடுகளை அறுக்க அனுமதிக்க மாட்டேன் என மிரட்டல் விடுப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக் கட்டடத்தில் கட்டணம் வசூலிக்கும் உரிமம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கூடுதல் வசூல் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஒண்டிப்புதூரைச் சேர்ந்த வியாபாரி ஏ.ஜே. அப்துல் சமது, வியாபாரிகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அம்பேத்கர் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சி.எம்.வி. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில், கழகப் பொதுச் செயலாளர் எபினேசர் மற்றும் சிறுபான்மை நலப் பிரிவு மாநிலச் செயலாளர் இப்ராகிம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வியாபாரிகளின் புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்குமா? என்பதே வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மாட்டிறைச்சிக் கூடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை எனப் புகார்! – குத்தகைதாரர் மீது மாவட்ட ஆட்சியரிடம் மனு!

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply