விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 32-ல் இருந்து 14 ஆக குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் நுகர்வோர் வழக்குகளை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில், வழக்கறிஞர்கள் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டால், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நுகர்வோர் ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் திருவண்ணாமலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சிரமமும் செலவும் ஏற்படும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நுகர்வோர் நீதிமன்றத்தை விழுப்புரத்திலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply