கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா

கோவை: கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள திருமதி தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமைத் தொண்டரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், இன்றைய தலைமுறை இளைஞர்கள் வேகமான மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், மாணவர் பேரவையில் பொறுப்பேற்பவர்கள் தலைவர்கள் மட்டுமல்ல; கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர்களின் பிரதிநிதிகள் என்றும் தெரிவித்தார். கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவர்களாக இருந்த பலர் பின்னாளில் சிறந்த சமூகத் தலைவர்களாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இளைஞர்களிடையே ஏற்படும் மனஅழுத்தம், வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு உள்ளிட்ட காரணிகள் அவர்களை போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி தள்ளுவதாக கூறிய அவர், போதைப்பொருள் ஒழிப்புடன், இளைஞர்களை அப்பழக்கத்திற்கு தூண்டும் காரணங்களையும் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விழாவுக்கு கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு பொருளாளர் மருத்துவர் ஓ.என். பரமசிவன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா வரவேற்றார்.

மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் பெயர் மற்றும் பதவி பொறிக்கப்பட்ட வில்லைகளை சிறப்பு விருந்தினர் கே. அண்ணாமலை வழங்கினார்.

தொடர்ந்து, போதைப்பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடாமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவின் நிறைவில் மாணவர் பேரவைத் தலைவரும் முதுநிலை அறிவியல் கணிதம் இரண்டாமாண்டு மாணவியுமான செல்வி பி. சந்தியா நன்றியுரையாற்றினார்.