கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

கோவை, ஆக. 24: கோவை சஹோதயா பள்ளிகளின் 10-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் தடகளப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர்.

12-ம் வகுப்பு மாணவர் பி. நினாத், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1,500 மற்றும் 800 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பிடித்தார். எஸ். ஆஸ்வின் சாமுவேல், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் சாதனை படைத்தார்.

11-ம் வகுப்பு மாணவி ஜோஷிதா பி. ஐயர், வட்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் மூன்றாம் இடமும் பெற்றார். 12-ம் வகுப்பு மாணவி பி. ஹரிணி, உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெற்றி பெற்று, தனிநபர் சாம்பியன்ஷிப் விருதையும் பெற்றார். 11-ம் வகுப்பு மாணவி கிரேஸ் ஏஞ்சல், நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார்.

இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் ஸ்டேன்ஸ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் ஓட்டப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதலிடமும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்றது.

மேலும், எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்ட் பள்ளி நடத்திய கோவை சஹோதயா பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டியில், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி இரண்டாம் இடம் பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கியது. நிகழ்ச்சியில் பேசிய ஐலீன் ஜெத்ரோ, மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாணவர்களின் ஒழுக்கம், விடாமுயற்சி, குழுப்பணி மற்றும் உறுதிப்பாடு பாராட்டுக்குரியது என்றும், உண்மையான சாதனை என்பது பதக்கங்கள் மற்றும் சாம்பியன் பட்டங்களைத் தாண்டி, கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சியால் உருவாகிறது என்றும் அவர் தெரிவித்தார். பள்ளியின் குறிக்கோளான “Excelsa Sequar – உயர்ந்ததை நோக்கிச் செல்லுதல்” என்பதை மாணவர்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.