கடலூர் மகளிர் கல்லூரியில் பரபரப்பு! – பாதுகாப்புத் தடுப்பை மீறி உள்ளே நுழைந்த விசிகவினர்; போலீசாருடன் தள்ளுமுள்ளு!

கடலூர் சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
திருமாவளவனை வரவேற்க கல்லூரி முன்பு ஏராளமான விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சில விசிகவினர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்ததாகவும், பின்னர் போலீசார் அவர்களை வெளியேற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிலர் மதில் ஏறியும் உள்ளே நுழைய முயன்றதாகவும், இதனால் பட்டமளிப்பு விழாவுக்கு வந்த மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.