திருச்சி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற வழக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைச் சேர்ந்த இரண்டு அரசு அலுவலர்களுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய ப.கண்ணன், மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேருவதற்கான ஆணையைப் பெற அதிகாரிகளை அணுகியுள்ளார்.
அப்போது, நடவடிக்கை எடுக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர் கண்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், லஞ்சப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேவதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், 28.08.2026 அன்று திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ல் தொடங்கிய லஞ்ச வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ளது.










Leave a Reply