கோவையில் எஸ்.எஸ்.வி.எம். சர்வதேச கல்வி மாநாடு தொடக்கம்!

கோவை, ஆக.31: கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் ஸ்கூலில், எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா 2026’ என்ற மூன்று நாள் சர்வதேச கல்வி மாநாடு தொடங்கியது. ‘எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்’ என்ற மையக்கருத்தில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது.

மாணவர்கள் எதிர்கால தொழில்நுட்ப மாற்றங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மன உறுதி, உடல் ஆரோக்கியம், உணர்ச்சி நல்வாழ்வு, தலைமைத்துவம் உள்ளிட்ட திறன்களை வளர்ப்பதே மாநாட்டின் நோக்கமாகும்.

எஸ்.எஸ்.எம்.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில், இந்திய விண்வெளி வீரர் ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி விஜயகுமார், மருத்துவர் டாக்டர் பால் மாணிக்கம், தொழில்முனைவோர் சர்வேஷ் சஷி, களரிப்பயற்று மாஸ்டர் எஸ். மகேஷ் உள்ளிட்டோர் மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.

மேலும், மாணவர்களின் புதுமை மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் ‘ஸ்டூடண்ட் ப்ரணர் விருதுகள் 2026’ மற்றும் ‘இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள் 2026’ வழங்கப்பட உள்ளன.

1998ம் ஆண்டு 25 மாணவர்களுடன் தொடங்கிய எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனம், தற்போது 20 வளாகங்களுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.