பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை!

பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பல ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களாக பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு, அரசு அங்கீகார அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட உரிய அங்கீகாரங்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பேருந்து பஸ் பாஸ் வழங்குதல், அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க உரிய அனுமதி வழங்குதல், PRO செய்தியாளர் குழுக்களில் தகுதியான நிருபர்களை இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஊடகங்களுக்கும் அரசு செய்திகளை சமமாக வழங்க வேண்டும் என்றும், தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணியாற்றும் நிருபர்களின் செய்தி சேகரிப்பு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அச்சு ஊடக பத்திரிகையாளர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு உரிய அரசு அங்கீகாரமும் சலுகைகளும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.