சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு! 500 குடும்பங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய ஆற்றுப்பகுதி – தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

வால்பாறை அண்ணா நகர் 10-வது வார்டு பகுதியில், ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில், ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் புதர் செடிகள் அடர்ந்து காணப்படுவதுடன், பல இடங்களில் தடுப்புச்சுவர் இல்லாத நிலையும் இருப்பதாக கூறப்படுகிறது.
மழைக்காலத்திற்குப் பிறகு புதர்கள் மேலும் அடர்ந்துள்ளதால், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி பயன்படுத்தும் பாதை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தவறி விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆற்றுப்பகுதியில் உள்ள புதர்களை உடனடியாக அகற்றி, ஆபத்தான பாதையை சீரமைத்து, தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என நல்வழிச் சட்ட ஆலோசனை அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.