6 வயது எல்.கே.ஜி மாணவர் உயிரிழப்பு – ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

விசாகப்பட்டினம்: வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் திட்டியதாகவும், குழந்தையை அடித்ததாகவும் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, 6 வயது எல்.கே.ஜி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் இருந்தபோது மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆசிரியர் அடித்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து குழந்தை பயந்து அழுததாகவும், பின்னர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் விசாரணைக்குப் பின்னரே உறுதி செய்யப்படும்.