ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது – பெரம்பலூரில் அதிரடி நடவடிக்கை!

பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் பகுதியில், வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
​துங்கபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் உரிமையாளர் ஒருவர், மின் இணைப்பு பெறுவதற்காக அப்பகுதி உதவி மின் பொறியாளர் ரகுராமன் (54) என்பவரை அணுகியுள்ளார். அப்போது, தற்காலிக மின் இணைப்பு வழங்க ரகுராமன் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
​லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த வீட்டு உரிமையாளர் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் அளித்தார்.
​போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரர் மூலம் உதவி மின் பொறியாளர் ரகுராமனிடம் கொடுக்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரகுராமனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
​அரசு அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது