

கோவை: ஆக 25
கோவை பாலதுறையில் உள்ள ஸ்டடி வேர்ல்ட் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கல்லூரியில், 2026–27-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் வகையில் ‘ஆரம்ப் 2026’ மாணவர் அறிமுக விழா நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் டாக்டர் வித்யா வினோத், நிர்வாக அதிகாரி எம்.எம். மனோகரன், சொப்னா மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயல்பாட்டு அலுவலர் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் கே. மயில்சாமி வரவேற்புரையாற்றினார். கௌரவ விருந்தினராக மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் டி. ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.
மாணவர்கள் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், போதைப் பொருட்களைத் தவிர்ப்பது, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் ராகிங் தடுப்பு குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், ராகிங் இல்லாத கல்விச் சூழலை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மற்றும் பொறுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


முதன்மை விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர், வாழ்வியல் ஆலோசகர், பாடலாசிரியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் தமிழ் இளவல் மதுரை வெ. இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.
தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தலைமைத்துவப் பண்பு, தகவல் தொடர்புத் திறன் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கல்லூரிப் பருவத்தை சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களது தனித்திறன்களை அடையாளம் கண்டு, எதிர்கால இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கல்லூரியில் வழங்கப்படும் கல்வி வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் மற்றும் மாணவர் நலச் செயல்பாடுகள் குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பயணமும் ஒரு சிறிய அடியில்தான் தொடங்குகிறது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற ‘ஆரம்ப் 2026’ நிகழ்ச்சி, புதிய மாணவர்களின் கல்லூரி வாழ்க்கைக்கு உற்சாகமான தொடக்கமாக அமைந்தது.











Leave a Reply