எட்டிமடை பேரூராட்சியில் தொடர் புகார்கள்… நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், எட்டிமடை பேரூராட்சியில் பல்வேறு நிர்வாகப் பணிகள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, க.க. சாவடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கான மைதானம் அமைக்க வேண்டும் என கடந்த 2020ஆம் ஆண்டு முதல் புகார்கள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான கோப்புகள் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தாலும், சுமார் ஓராண்டாக எந்தவித முன்னேற்றமும் இல்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானம் இல்லாததால், மாணவர்கள் விளையாட்டுப் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாமல், தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், எட்டிமடை பேரூராட்சியின் குடிநீர் ஆழ்துளைக் கிணறு மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி வருவதாகவும், அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகளில் தரம் குறித்த சந்தேகங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வீட்டு வரி, கட்டிட அனுமதி, புதிய குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு மற்றும் குடிநீர்க் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரங்கள் தொடர்பாக பலமுறை புகார்கள் அளித்தும் உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட கையூட்டுப் பாசறை பொறுப்பாளர் பா. முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பேரூராட்சி அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சிகள் துறை உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்மிடம் புகார்களுக்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள முருகன், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒரு மாதத்திற்குப் பிறகு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கமும், உரிய விசாரணையின் முடிவும் வெளிவர வேண்டியது அவசியமாகியுள்ளது. தம்மிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எட்டிமடை பேரூராட்சியில் எழுந்துள்ள இந்தப் புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகள் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.