கோவை: 8,279 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு – காவல் ஆணையர் Dr. N. கண்ணன் IPS தலைமையில் உறுதிமொழி!

கோவை மாநகரில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இன்று பெருமளவிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப்பட்டன.

​கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் Dr. N. கண்ணன் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் வைத்து, சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்யப்பட்ட 8,279 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பாதுகாப்பான முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

​முன்னதாக, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற பெருந்திரள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

​நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், “கோவை மாநகரை போதைப்பொருள் இல்லாத நகரமாக மாற்றுவதே காவல்துறையின் முதன்மை இலக்கு. சட்டவிரோதமாகப் புகையிலை மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” என எச்சரிக்கை விடுத்தார்.