கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம்!

கோவை மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் 54 இளநிலை உதவியாளர்களின் பணி ஆணைகள் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்களில் முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை, இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படவில்லை, சீனியாரிட்டி விதிகளும் மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக பதவி உயர்வுக்காக காத்திருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள், சம்பந்தப்பட்ட நியமனங்களின் பணி ஆணைகளை ரத்து செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 54 இளநிலை உதவியாளர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம், அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் நடைபெற்ற நியமனங்கள் தொடர்பான சர்ச்சையை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.