கோவை தொண்டாமுத்தூரில் ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வரதராஜபுரம் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ தீர்த்த விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ கருப்பராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குருமகா சன்னிதானம் டாக்டர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மடாதிபதி தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடம் விஸ்வகர்மா ஐகத்திரு பிரம்மஸ்ரீ ஸ்ரீ சிவசண்முகசுந்தர பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோவில் விமானம் மற்றும் மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், முன்னாள் மற்றும் தற்போதைய மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆன்மிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி அம்மனின் அருளைப் பெற்றனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும், கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தலைவர் டி. செல்வராஜ், செயலாளர் பி. சண்முகம், துணைச் செயலாளர் எம். ராம்குமார், பொருளாளர் எம். ரிக். ரவி, துணைத் தலைவர்கள் சி. செல்வம், டி.எம். ஐங்கர திருமூர்த்தி மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்