வரதட்சணை கொடுமை… புதுமணப்பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர்!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில், வரதட்சணை விவகாரம் மற்றும் சந்தேகத்தின் காரணமாக புதுமணப்பெண்ணை கணவர் கொடூரமாக தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அஞ்சு என்ற இளம்பெண்ணுக்கும் நந்துவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது தனது சகோதரிக்கு வழங்கப்பட்ட நகை மற்றும் காருடன் ஒப்பிட்டு, கணவர் அடிக்கடி வரதட்சணை தொடர்பாக பேசியதாக அஞ்சு தெரிவித்துள்ளார்.
மேலும், தான் யாரிடமும் பேசுவது தொடர்பாக கணவர் தொடர்ந்து சந்தேகப்பட்டதாகவும், செல்போனை சோதனை செய்ததுடன், தன்னை கட்டுப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 4ஆம் தேதி கணவருடன் சவுதி அரேபியாவுக்குச் சென்ற பின்னர், அங்கு தன்னை கடுமையாக தாக்கத் தொடங்கியதாக அஞ்சு தெரிவித்துள்ளார். வீட்டில் பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கர், இடிக்கல், பெல்ட், பூட்ஸ் மற்றும் லேப்டாப் சார்ஜர் உள்ளிட்ட பொருட்களால் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வீட்டை பூட்டிவிட்டு கணவர் வேலைக்குச் செல்வதாகவும், செல்போன் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் இருந்து எடுத்துச் சென்றதாகவும், உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உணவு சமைக்க வற்புறுத்தியதாகவும் அஞ்சு தெரிவித்துள்ளார்.
கணவருக்கு பயந்ததால் இந்த கொடுமைகள் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நந்து மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பணியாற்றி வரும் நந்துவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பும் சட்ட நடவடிக்கையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.