



கோவை சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆர்.வி.எஸ். நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஓணம் பண்டிகையின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் ஒன்றிணைந்து கல்லூரி வளாகத்தில் வண்ணமயமான மலர்களால் அழகிய அத்தப்பூ கோலம் அமைத்தனர்.
தொடர்ந்து, பாரம்பரிய உடைகளில் மாணவ, மாணவிகளின் நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சிகள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், மெகா செண்டமேளம் மற்றும் காவடியாட்டம் நடைபெற்றது. செண்டமேளத்தின் அதிரடி இசையும், காவடியாட்டத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் கல்லூரி வளாகத்தில் விழாக்கோலத்தை ஏற்படுத்தின.
ஓணம் கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் சிறப்பு ஓணம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழை இலையில் பரிமாறப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து ருசித்து மகிழ்ந்தனர்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடியது, விழாவின் மற்றொரு சிறப்பாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆர்.வி.எஸ். குழும நிறுவனங்களின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் சமன்யூ சதீஷ், ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களிடையே பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற பாரம்பரிய விழாக்கள் தொடர்ந்து கொண்டாடப்படுவதாக தெரிவித்தனர்.
அத்தப்பூ கோலம்… பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்… மெகா செண்டமேளம்… காவடியாட்டம்… 25 வகையான உணவு விருந்து… என, ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகமே ஓணம் பண்டிகையால் விழாக்கோலம் பூண்டது.
மாணவர்களின் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடைபெற்ற இந்த ஓணம் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.









Leave a Reply