கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சர் வன்னியரசு பேச்சுக்கு எதிர்ப்பு

கோவையில், மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பாக சமூகநீதி அமைச்சர் வன்னியரசு பேசியதாக கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய தமிழகம் கட்சி, விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெகத்குரு பாபுஜி சாமிகள், தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
மேலும், கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள மாட்டிறைச்சிக் கடையை அகற்ற வேண்டும் என்றும், விஸ்வகர்மா சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக ஐந்தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் உள்ளூர் விஸ்வகர்மா சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.