கோவைப்புதூர் டி.வி.எஸ்.எம். பள்ளியில் 172-வது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி மற்றும் ஓணம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள டி.வி. சேகரன் நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 172-வது ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி மற்றும் ஓணம் விழா பக்தியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி நிர்வாக அறங்காவலரும், பொதுச் செயலாளருமான டி.எஸ். ஹரீஷ்குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

ஆத்ரேயம் ஸ்ரீ சங்கர தபோவனத்தின் முக்கிய மடாதிபதி சுவாமி டாக்டர் சஜிமோன் பரயில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சுவாமிஜி, அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும், நவீன உலகில் ஆன்மீக நுண்ணறிவின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

எஸ்.என்.எம்.வி கல்லூரி ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் இ.கே. கிரீசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் கே.வி. பீனா, சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதல், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி மற்றும் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, டாக்டர் இ.கே. கிரீசன் எழுதிய “சுவாமி மற்றும் குரு” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆகியோரின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் இந்த நூலை சிறப்பு விருந்தினர் வெளியிட, முதல் பிரதியை டி.எஸ். ஹரீஷ்குமார் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் டி.வி.எஸ்.எம். பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர் அதுல்யா டி. ஹரீஷ், ஸ்ரீ நாராயண குருதேவ சங்க செயலாளர் பி.வி. அசோகன், குனியமுத்தூர் மலையாளி சமாஜம் செயலாளர் ஆர். அரவிந்தாட்சன் உள்ளிட்டோர் கௌரவ உரையாற்றினர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் நிறைவில், 12-ஆம் வகுப்பு ஆங்கில இலக்கிய மன்றத் தலைவர் தக்ஷா நன்றியுரை ஆற்றினார்.