கோவையில் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாடு மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான ‘கூல் கான்க்ளேவ் 3.0’ மாநாடு தொடங்கியுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள மெர்லிஸ் ஹோட்டல் வளாகத்தில், இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங், ரெஃப்ரிஜிரேட்டிங் அண்ட் ஏர் கண்டிஷனிங் இன்ஜினியர்ஸ் எனப்படும் ISHRAE சார்பில், இந்த மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது.

‘Cool Conclave 3.0 – Decarbonising the Built Environment’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள முன்னணி தொழில் வல்லுநர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்கள் மற்றும் குளிரூட்டும் கருவிகளால் ஏற்படும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைப்பது குறித்து மாநாட்டில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

குறைந்த மின்செலவில், அதிக திறனுடன் இயங்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் தொழில்துறை நிபுணர்கள் விளக்கமளிக்கின்றனர்.

மேலும், சூரிய மின்சாரம், காற்றாலை மற்றும் நீர்மின் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகளவில் பயன்படுத்தி, மின் தேவையையும் கார்பன் உமிழ்வையும் குறைப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின்சார பயன்பாட்டை குறைத்து, ‘நெட் ஸீரோ எனர்ஜி’ என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

கோவை தொழில் முனைவோர் மற்றும் புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளின் முக்கிய மையமாக விளங்கும் நிலையில், ‘கூல் கான்க்ளேவ் 3.0’ மாநாடு கோவையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது