சுதந்திர தினத்தில் ‘தி ஐகானிக் இந்தியா விருது 2026’ – சமானியூ சதீஷுக்கு கவுரவம்…!

கோவை, ஆர்.வி.எஸ். குழும கல்வி நிறுவனங்களின், சுலூர் வளாகத்தின் மீடியா மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் சமானியூ சதீஷுக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தி ஐகானிக் இந்தியா விருது 2026’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு, தலைமைத்துவம், தேசக் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட பணிகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
டிரெட்டாயுக் பவுண்டேஷன் சார்பில், மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் உத்யம் அமைப்புடன் இணைந்து விருது வழங்கப்பட்டது.
மீடியா மற்றும் தகவல் தொடர்புத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வரும் சமானியூ சதீஷ், பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்தி, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.
மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்திய நிறுவனங்களுடன் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறார்.
கல்வி, தலைமைத்துவம், புதுமை மற்றும் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவதற்காகவும் அவரது பணி பாராட்டப்பட்டுள்ளது.
சமானியூ சதீஷின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைவதாகவும், அவர்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்று தேச முன்னேற்றத்தில் பங்களிக்க ஊக்கமளிப்பதாகவும் விருது வழங்கிய அமைப்பினர் தெரிவித்தனர்.
சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்பட்டது, அவரது தொழில்முறை சாதனைகளுடன் தேசப்பற்று, அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது..