சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வேண்டாம் சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்  கல்வீச்சால் பரபரப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே நாகம்மநாயக்கன்பாளையத்தில், சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டையை தூர்வாரி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் குட்டையில் மழைநீர் தேங்குவதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு இது முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க சூலூர் தவெக எம்.எல்.ஏ. என்.எம். சுகுமார் அங்கு வந்தார். அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜையின்போது, எம்.எல்.ஏ. தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.வை நோக்கி கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே விடப்படும்; கழிவுநீர் விடப்படாது என எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்துள்ளார்.