70 ஆண்டுகாலப் போராட்டம்… கோவையில் பெண்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கொலை மிரட்டல்?

கோவையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கோரி போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக அமைச்சர் உத்தரவிட்ட நிலையிலும், இடத்தை காலி செய்ய சொல்லி மாநகராட்சி ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை நஞ்சண்டாபுரம் பகுதியில் 3 தலைமுறைகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைத்து வரிகளையும் செலுத்தி வரும் இவர்கள், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
​இதனிடையே, வீடுகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்துமாறு அமைச்சர் சு. முத்துசாமி உத்தரவிட்டிருந்த நிலையிலும், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று இடத்தை காலி செய்யுமாறு பெண்களிடம் கடுமையாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.