கோவையில் இஸ்ரேலுடன் இணைந்து சர்வதேச புதுமை மன்றம்!

கோவையில் உள்ள ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.பி.ஏ. துறை சார்பில், இஸ்ரேல் துணைத் தூதரகத்துடன் இணைந்து சர்வதேச புதுமை மற்றும் மதிப்பு உருவாக்க மன்றம் தொடங்கப்பட உள்ளது.இதுதொடர்பாக ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் செந்தில் கணேஷ், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகத்தின் தூதரகத் தலைவர் ஓர்லி வெய்ஸ்மேனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.மாணவர்கள், தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, புதுமை சிந்தனை மற்றும் தொழில்முனைவு தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த மன்றம் ஆண்டுதோறும் நடத்தப்பட உள்ளது.இதன் முக்கிய அம்சமாக மாணவர் புதுமைச் சவால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதில் மாணவர்கள் குழுக்களாக இணைந்து, நிஜ வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க உள்ளனர்.மாணவர்கள் உருவாக்கும் சிறந்த தீர்வுகள், 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெற உள்ள சர்வதேச நிகழ்வில் தொழில் துறை பிரதிநிதிகள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.இந்த முயற்சி, மாணவர்களின் புதுமை சிந்தனை மற்றும் தொழில்முனைவு திறனை மேம்படுத்துவதுடன், சர்வதேச கல்வி மற்றும் தொழில் துறை இணைப்புகளுக்கும் புதிய வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.