

கோவை: கோவை அருகே ஏ.ஜி. புதூர் பகுதியில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் நீண்ட நாள் விமானப் பயணக் கனவை நனவாக்கும் வகையில், சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இளைஞர் விஷ்ணு வேணுகோபால் சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஏ.ஜி. புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஓடை வனம்’ அமைப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது விடுமுறை நாட்களில் தூய்மைப் பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தங்களது கிராமத்தை பசுமை நிறைந்த சோலைவனமாக மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையம் அருகே இப்பகுதி அமைந்துள்ளதால், விமானங்கள் பறந்து செல்வதை ஆர்வத்துடன் பார்த்து வந்த மாணவர்களுக்கு, தாங்களும் எப்போது விமானத்தில் பயணிப்போம் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.
மாணவர்களின் இந்த ஆசையை அறிந்த கோவை பட்டணம் பகுதியைச் சேர்ந்த ‘கார்ஸ் 327’ நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால், அவர்களது கனவை நனவாக்க முன்வந்தார். இதன்படி, ஏ.ஜி. புதூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 36 பேரை ஆகஸ்ட் 26-ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கிய இடங்களை சுற்றிக் காண்பித்துவிட்டு, அதே நாளில் மீண்டும் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களின் விமானப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கான அனைத்து செலவுகளையும் ‘கார்ஸ் 327’ நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவ, மாணவிகள், தங்களது நீண்ட நாள் கனவை நனவாக்கிய விஷ்ணு வேணுகோபாலுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
இதற்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏ.ஜி. புதூர் ‘ஓடை வனம்’ பகுதியில் நடைபெற்றது. இதில் பசுமை ஏ.கே. புதூர் தங்கவேல், மரம் சண்முகம் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டனர். ஏற்பாடுகளை ‘கார்ஸ் 327’ நிறுவனத்தைச் சேர்ந்த விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் செய்திருந்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் விமானப் பயண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு வேணுகோபாலின் மனிதநேய முயற்சிக்கு ஏ.ஜி. புதூர் மற்றும் குரும்பபாளையம் பகுதி பொதுமக்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.









Leave a Reply