கலங்கலில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பா? – கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு; ஊராட்சி நிர்வாகத்தின் பதில் என்ன?

கலங்கலில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பா? – கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு; ஊராட்சி நிர்வாகத்தின் பதில் என்ன?
கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கலங்கல் கிராமத்தின் வடக்கு வீதியில் சுமார் 10 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு வீடு மற்றும் கடை கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி, துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தியதாகவும், ஆனால் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பொதுமக்களே இணைந்து கழிவுநீரை வெளியேற்றுவதற்காக தனியாக குழாய் அமைத்ததாகவும், அந்த குழாய் பின்னர் சேதப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது, “CM Cell-ல் Complaint பண்ணுங்க” என்று கூறி, தங்களது புகாரை அலட்சியமாக கையாண்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
மேலும், தெருவில் வாகனங்கள் மற்றும் குடிநீர் வாகனங்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசு புறம்போக்கு நிலம், பொதுப்பாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிலத்தை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடையை அந்த இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் புகாருக்கு மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.